நீண்ட நேர கார் பயணத்தின் பின்னர் எங்காவது சாப்பிட்டு விட்டு கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு பயணப்படலாம் என்று முடிவெடுத்திருந்தோம். காடுகளையும் நீர் நிலைகளையும் உயர்ந்து வளர்ந்த மலைகளையும் தவிர நீண்ட நெடு நேரமாக எதையுமே காணோம்.
ஒரு ஆதி மனிதனாக இருந்து இருந்தால் உணவைப்பெற இந்தச்சூழல் போதுமாய் இருந்திருக்கும். போதுமாய் என்பதை விட தாராளமாய் என்பதே சரியாக இருக்கும். ஆனால் நாம்தான் நாகரீகப்படிகளில் பல காத தூரம் ஏறி வந்துவிட்டோமே. நல்ல உணவகம் ஒன்று தேவையாக இருந்தது. நல்ல உணவகம் என நான் சொல்லுவது இப்போதைக்கு உணவகமாக இருந்தால் போதும் என்ற அளவில் வரையறுத்துக்கொள்ளலாம். அவ்வளவு பசி.பகல் கடந்து மாலை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு நேரத்தில் இன்னும் 2km தூரத்தில் உணவு கிடைக்கும் இடம் உள்ளதாக ஒரு அறிவிப்புப்பலகை கண்ணில் பட்டது. புதையல் தேடி அலைபவனின் வெற்றி எப்படி இருக்கும் என்பது தொடர்பில் அன்று அந்த நொடி ஒரு விம்பம் வந்துபோனது.
அந்த உணவகம் நல்ல பெரிய இடத்தில் ஒரு கலை நயத்தோடு உருவாக்கப்பட்டிருந்தது. காட்டிற்கு நடுவில் அமைந்த பெரிதாக மக்கள் பயணப்படாத ஒரு நெடுஞ்சாலையின் கரையில் உள் இருக்கை வெளியிருக்கையென ஓரளவு பெரிய உணவகம். இவ்வாறன இடங்களில் இருக்கும் உணவகங்கள் பெரும்பாலும் குடும்பமாக சேர்ந்து நடத்துவதாகத்தான் இருக்கும். இதுவும் அப்படித்தான். அந்த உணவகத்திற்கு வெளியே இரண்டு Bikeகுகள் மட்டும் நிறுத்தப்பட்டிருந்தன. அலஸ்கா நெடுஞ்சாலை இருசக்கர வாகனங்களில் உலகை சுற்றுபவர்களை அதிகம் ஈர்க்க்கும் இடங்களில் ஒன்றென்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
அந்த உணவகத்தில் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் தங்கள் வருகையை எழுதிவிட்டு போக பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. சைக்கிளில் வருபவர்களுக்காக மட்டும் பிரத்தியேகமாக வைக்கப்பட்ட ஓட்டோகிறாப் பலகைகள். அவர்களின் சொந்த நாடு, பெயர், எங்கிருந்து எங்கு செல்கின்றார்கள், எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் பயணப்பட திட்டமிட்டிருக்கின்றார்கள் என்ற விபரங்கள் எழுதப்பட்டிருந்தது. என் கண்கள் இலங்கையில் இருந்து யாராவது வந்திருந்தார்களா என்பதைத்தான் முதலில் தேடியது. இல்லை யாரும் இல்லை. ஆனால் இந்தியா இருந்தது. நேபாளம் இருந்தது. (தலா ஒரே ஒருவர் பெயர்கள்தான்.) கூடுதலாக ஐரோப்பிய நாடுகளின் பெயர்கள் அதிகமாக இருந்தது.
ஒரு மனிதன் வாழும் சூழல் அவன் வாழ்வை தகவமைக்கும். இந்த ஞாபகார்த்த பலகை எனக்குள் அதைத்தான் சொன்னது. நான் பிறந்து வளர்ந்த நாட்டில் பயணப்படுதல் என்பது ஆடம்பரத்தைத்தாண்டிய ஒன்று. வாழ்வின் 25 வருடங்கள்வரை படிக்கவேண்டும், பின் வேலை, பணம் சேர்த்தல், திருமணம், குழந்தை… பிறகு நாற்பதுகளின் இரண்டாம் பாதியில் முடிந்தால் பயணப்படல். அதுவும் சிலர்தான். இதில் பிழை சொல்ல ஒன்றுமில்லை. மகிழ்வென்பது என்ன என்றும், தம் வாழ்வின் தேர்வுகள் எவை என்றும் முடிவுசெய்ய வேண்டியவர்கள் அவரவர்தான். வாழ்தலே பெரும் பாடாய் இருக்கும் நாட்டில் ஊர் சுற்றுவதென்பது ஊதாரித்தனமாய் பார்க்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. ஆனாலும் இந்த மேலைத்தேய நாட்டு மக்களின் வாழ்வியலின்பால் ஈர்க்கப்படுவதை தடுக்க முடியவில்லை. காசே இல்லாதவன்கூட பயணப்படுகிறான். அவன் அரசாங்கம் அவன் முதுமையில் அவனை தாங்கிக்கொள்ளும் என்ற தைரியமாக இருக்கலாம்.
இந்த உணவகத்தை நடத்துபவர்கள் முன்னாள் சைக்கிள் பயணிகளாம். சைக்கிளில் நாடுகளை கண்டங்களை ஒரு காலத்தில் கடந்தவர்களாம். இப்பொழுது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சகிதம் இந்த இடத்தில் உணவகம் வைத்துக்கொண்டுவிட்டார்களாம். பிள்ளைகள் இப்பொழுது Bikeக்கில் நாடுகளை கண்டங்களை பார்வையிடும் travelers ஆம். நிறைய நகைச்சுவை உணர்வுகொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
பெரிய வீடு, விலை உயர்ந்த கார், மாதம் பெரிய தொகை வருமானம் இவைகளே எமது வெற்றியாக இருக்கும்போது இதோ இந்த மனிதர்களிற்கு அவை எல்லாம் ஒன்றுமே இல்லாத ஒன்றாக இருக்கின்றது. இதில் எது சரி தவறு என்றெல்லாம் தேவையில்லாதது. முதலே சொன்னதுபோல, நாம் வளரும் சூழல், எம் தனிப்பட்ட தேவை, ஆசை, முடிவுகளே இவற்றை தீர்மானிக்கும்.
எனக்கு சைக்கிள் ஓடத்தெரியாது. இதுவரை பழகவேண்டும் என்ற ஆசையும் இருந்ததில்லை. ஆனால் இப்பொழுது இந்த ஆண்டு முடிவதற்குள் சைக்கிள் ஓட கற்றுக்கொள்ள வேண்டும். அதில் நாடுகளை கடக்காவிட்டாலும் வீதிகளையாவது; ஒருமுறையாவது….




0 Comentarios