அப்பொழுது நான் தரம் 9 இல் படித்துக்கொண்டிருந்தேன். நான் கணித வகுப்பிற்கு செல்லும் கட்டிடத்தின் பக்கத்தில் வசிப்பவர்கள் ஒரு சகோதர மொழிக்குடும்பம். அப்பொழுதெல்லாம் அந்த மொழியின் அரிச்சுவடி கூட தெரியாது எனக்கு. இப்பொழுதும் ஒன்றும் அத்தனை திறம் இல்லை.
நான் வகுப்பிற்கு போகும் போதும் வரும் போதும் அந்த வீட்டுப்பையன் வாசலில் நல்ல டிப்டொப்பாம உடை அணிந்துகொண்டு நிற்பதைப்பார்த்திதுக்கிறேன். நான் அவனைக்கடந்து செல்லும்போது அப்படி ஒரு புன்னகை அவன் முகத்தில் வந்து ஒடிக்கொள்ளும். அவனிற்கும் பெரிய வயது ஒன்றும் இருக்காது. தரம் 11 அல்லது 12 இருக்க வாய்ப்பிருக்கிறது.
காதல் பற்றிய எந்த அத்தியாயங்களும் பரீட்சையமில்லாத, ஒரு அன்னியன் நெருங்கினாலே பயந்து வேர்த்துவிடுகிற பருவம்.
ஒரு நாள் அந்த அன்பர் ஒரு காகிதத்தை என்முன் நீட்டினார். பயமாக இருந்தாலும் அதை பார்த்தேன்.
பாவிப்பய தனிச்சிங்களத்தில் ஒரு கடிதத்துடன் காத்திருந்தான்.
அது எப்படி காதல் கடிதம் என்று உனக்கு தெரியும் என்று நீங்கள் கேட்கலாம். அவன் தான் தரமுன்னமே அத்தனை வெட்கப்பட்டு தலை குனிந்து வெகுளியாச் சிரித்து “ஐ லவ் யூ” என்று காகிதத்தை என்னிடத்தில் சேர்த்துவிட துடித்துக்கொண்டிருந்தானே. அதைக்கூடவா புரிந்துகொள்ள முடியாது.
வாங்கிக்கொள்ளப்பயந்து ஓடியே வந்துவிட்டேன்.
பிறகு சில காலம் அதே காகிதத்துடன் அவன் என்னை பின் தொடர்ந்திருக்கிறான். அவன் பேசுவது எனக்குப்புரியாது… நான் பேசினாலும் அவனுக்குப்புரியாது…
அவனோ நானோ அவர் அவர் மொழியை படித்திருந்தாலாவது இன ஒற்றுமையை வளர்த்திருக்கலாம். ஆனால் இருவரும் அதை முயலவில்லை. இப்படியாக அந்த கதை முடிந்துபோனது.
பிறகு அவன் அதே கடிதத்தை வேறு ஒரு பெண்ணிற்க்குக் கொடுத்திருக்கக்கூடும்.

0 Comentarios