எடின்பர்க்கில் உள்ள கிரேஃப்ரியர்ஸ் கிர்கியார்ட்

 

உலகின் மிகவும் பயங்கரமான அமானுஷங்கள் நிறைந்த சுடுகாடு எது என்று கேட்டால் அதில் முதலாவதாக வரும் பெயர் Greyfriars Kirkyard in Edinburgh. இது நான் பள்ளிக்காலங்களில் நண்பர்களுடன் இணைந்து பேய் கதைகள் பேசும்போது அறிந்த ஒன்று. அன்றிலிருந்து இங்கு போய் பார்க்க வேண்டும்,எனது இரவுகளில் ஒன்றை இங்கு செலவிடவேண்டும் என்ற ஆசை ஒட்டிக்கொண்டுவிட்டது. பேய்களில் நம்பிக்கை இல்லையாகினும் அது தொடர்பிலான ஆர்வமும், பேய்கதைகளில் ஒரு மிகப்பெரிய பிடிப்பும் இருக்கத்தான் செய்கின்றது. நான் Edinburgh வருவதாக முடிவு செய்த மாத்திரத்தில் முதலாவதாக குறித்து வைத்துக்கொண்ட இடமும் இதுதான்.


16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மயானம் அன்றுதொட்டு பல தெரிந்த தெரியாத மனிதர்களில் சமாதிகளை தாங்கி நிற்கின்றது. அந்த காலகட்டங்களில் நடந்த போர்களில் இறந்துபோன வீரர்களது சமாதிகளும், பெயர் தெரியாதவர்களின் நினைவுகளும் இங்கு உள்ளது. இதைவிட Harry Potter திரைப்படத்தில் வந்த பல கதாப்பாத்திரங்களின் பெயர்கள் இங்குள்ள கல்லறைகளில் இருந்துதான் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் எல்லோரும் என்றோ வாழ்ந்து மறைந்த நிஜ மனிதர்கள். மந்திரம் தெரியாத மாந்தர்கள் என்று வைத்துக்கொள்வோம். இங்கு சொல்லப்படும் பேய்கதைகள் சுவாரஷ்யமானது. அதுமட்டுமல்லாது 24 மணிநேரமும் எந்த நாளிலும் இந்த மயானம் திறந்திருக்கும். இதன் அருகில் ஒரு தேவாலயமும் உண்டு. இங்கு 1679 ஆம் ஆண்டு அரச வழக்கறிஞ்சர் ஒருவர் மதத்தின் பெயரால் மிக மோசமாக கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். அவர் கல்லறைதான் இங்கு பயங்கரமானதாக சொல்லப்படுகிறது. அவரது ஆத்மா இந்த கல்லறையில் இரவு வருபவர்களை தாக்குவதாகக்கூட கதைகள் உண்டு. இது தொடர்பாக பல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் இருக்கின்றது.

தேசம் கடந்து வந்துவிட்டு என் பால்யங்களில் பேசி பிரமித்து அடுத்தவரை பயமுறுத்திய கதைகளை நிகழ்த்திய கல்லறையை காணாமல் எப்படி விட்டுவிட முடியும். என் பயணங்களில் முக்கியமானது இந்த கல்லறைக்கு சென்றதுதான்.மழை நின்று ஓய்ந்த மாலையில் இங்கு சென்றேன்.மூன்று மணி நேரங்கள் நடந்து அனைத்து கல்லறைகளையும் கவனமாக பார்த்துக்கொண்டு வந்தேன். Harry Potter தொடரில் வந்த சில கதாப்பாத்திரங்களில் கல்லறைகளை கண்டுபிடித்தேன். பின் 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஆத்மாவாக அலைவதாக நம்பப்படும் Sir George MacKenzie அவர்களின் கல்லறையில் வந்து நின்றுகொண்டேன்.அந்த குறிப்பிட்ட கல்லறையை மட்டும் மக்கள் உள்ளே போக முடியாதவாறு வேலிகள் இட்டு மூடியிருக்கிறார்கள். மனிதர்களின் ஆர்வத்தை தூண்டும் இன்னொரு நடைமுறையாக தோன்றியது.இங்கு இரவில் தங்கிய பலரிற்கு இரத்த காயங்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளதாம். அன்று இரவு அந்த மயானத்தில் தான் நின்றேன். விடிய காலை மூன்று மணிவரை அங்குதான் நடந்துகொண்டிருந்தேன்.

நான் எதையும் அசாதாரணமாக உணரவில்லை. ஆனாலும் பெரும் தனிமையும் மாயணங்களுக்கே உண்டான கனத்த மௌனமும் கொஞ்சம என் துணிச்சலில் வேர்களை அசைத்துத்தான் பார்த்தது. ஒரு மயானத்தில் என் இரவை செலவழிக்க வேண்டும் என்ற ஆசைகளில் ஒன்றை உலகின் மிகவும் பயங்கரமான கல்லறையில் கழித்துவிட்டு வந்தேன். எதையிட்டு நாம் பயந்து கொள்கிறோமோ அதை எதிர்கொள்ள வேண்டும் என்பார்கள். கல்லறைகளில் புத்தகம் படிக்க பலதடவைகள் சென்றிருக்கிறேன் ஆகிலும் இரவில் தனிமையில், பாடசாலைக்காலங்களில் பேய்கதைகளாய் கேள்விப்பட்ட இடமொன்றில் நின்று கொண்டிருந்தபோது அந்த உணர்வின் அதிர்வுகளை எழுதிவிட முடியவில்லை. 

சின்ன சின்ன ஆசைகளையெல்லாம் வாழ்ந்து, உணர்ந்து, சொல்லித்தீர்க்காமல் எதை பெரிதாய் சாதித்துவிட முடியும்.

கடவுளோ, சாத்தானோ, ஆத்மாவோ அது ஒரு அனுபவம்தானே.....

Sir George MacKenzie அவர்களின் கல்லறை


0 Comentarios

Follow Me On Instagram