Edinburgh சாலைகளில் நடந்துகொண்டிருந்தபோது இந்த நினைவுப்பலகையும் அதை ஒட்டி மனித கால்களை வைத்து நிற்கக்கூடியதுபோல இரண்டு சிறிய மஞ்சள் அடையாளங்கள் நிலத்திலும் காணப்பட்டன. அந்த நினைவுப்பலகையில் கடைசியாக
திறந்த வெளியில் இங்குதான் மரணதண்டனை வழங்கப்பட்டு தூக்கிலிடப்பட்டு நிறைவு செய்யப்பட்டதாக எழுதியிருந்தது. அந்த இடம் இன்று ஒரு நாற்பக்க சாலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள உல்லாச மதுபான கடை. என்றோ ஒரு மனிதனை ஊர் பார்க்க தூக்கிலிடப்பட்ட இடம் என்றதும் அங்கு சிறிதுநேரம் நின்று கொண்டிருந்தேன். பிறகு அங்கிருந்த ஒரு கடையில் இது தொடர்பாக விசாரித்தேன். இவ்வாறு இங்கு நிறைய இடங்கள் இருப்பதாக சொன்னார். பொதுவெளியில் தூக்கிலிடப்படும்போது ஆர்வமாக மக்கள் வந்து அதை பார்ப்பார்களாம். இந்த தண்டனை நிறைவுசெய்யப்பட்ட போது குறைந்தது 25000 பேர் பார்வையாளர்களாக வந்திருந்தார்களாம். இங்கிருக்கும் அனைத்து கட்டிடங்களும் அன்று குடியேற்ற இடங்கள். அனைவரும் வீட்டிற்கு வெளியிலும், ஜன்னல்வழியாகவும் இதை பார்த்தார்களாம். அவர் சொல்ல சொல்ல என் கற்பனைகளில் நான் 1864 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி அந்த இடத்தில் நின்றுகொண்டிருப்பதாய் நினைத்துக்கொண்டேன்.
அந்த குற்றவாளியை தூக்கிலிட முயன்றபோது அவரது கயிறு நீளமாக இருந்ததால் அவரது காலில் நுனி நிலத்தில் முட்டியதாகவும், அதனால் மரணிக்க முடியாமல் மூச்சு திணறி ஒரு கட்டத்தில் தனது கால்களை தானே மடித்து தற்கொலைசெய்துகொள்ள முயன்றபோது கயிறு அறுக்கப்பட்டு, அவரிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு 3 மணி நேரத்தின் பின் மீண்டும் சரியான நீளத்தில் கயிறுகளை பயன்படுத்தி தூக்கிட்டு கொன்றார்களாம் என்று அவர் கதை சொல்லி முடித்தார். அதனுடன் இன்னுமொன்றும் சொன்னார். மழை நாட்களில் அந்த மஞ்சள் அடையாளங்களை கவனிக்காமல் செல்லும் பலர் இங்கு தவறி விழுந்துபோவதுண்டாம். அதை பேய்கதைகளாகவும் இங்கு பேசிக்கொள்வார்களாம். நானும் அவரிடம் நன்றி சொல்லிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டேன்.
என்னைப்போல யாரும் அந்த இடத்தை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பின்பு நான் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டேன். சிறிது நேரத்தின் மழை பெய்ய ஆரம்பித்ததும் அந்த கடையில் உள்ளவர் சொன்னது நினைவில் வந்தது. மழை நேரங்களில் இங்கு பலர் விழுவதுண்டு என்றும் அதை பேய் கதைகளாக இங்குள்ள மக்கள் கருதுகிறார்கள் என்றும். அதனால் நான் நின்ற இடத்தில் இருந்து மீண்டும் தூக்கு இடம்பெற்ற இடத்திற்கு சென்று சுவரோரமாக சாய்ந்து நின்றுகொண்டேன். ஒரு மணி நேரத்தில் 4 பேர் சொல்லிவைத்ததுபோல தடக்கி விழுந்தார்கள். அதற்கு காரணம் பேய்கள் எல்லாம் இல்லை. அந்த மஞ்சள் கட்டுகளை அவர்கள் கவனிக்காதது. சிறிதுநேரத்தில் Spain நாட்டை சேர்ந்த ஒரு பெண் என் அருகில் வந்து நின்றுகொண்டார். நீங்களும் இந்த கதை கேள்விப்பட்டீர்களா என்றார். நான் ஆம் என்றேன். சிரித்துக்கொண்டு சொன்னார் "ஒரு வளர்ந்த தேசம் தன்னை வளர்த்துக்கொள்ள முதல் எத்தனை பிற்போக்கான விதிகளையும் நடைமுறைகளையும் இருப்பில் வைத்திருந்திருக்கிறது" நானும் சிரித்துக்கொண்டே சொன்னேன். அன்று தூக்கிலடப்படும்போது பார்த்துக்கொண்டு நின்ற 25000 பேர்களில் நாங்களும் இருவர் என்று. சிரித்தார். நானும் அவரும் அதன்பிறகு அந்த விடுதியில் ஒன்றாகத்தான் உணவுண்டோம். எங்களுக்கு உரையாட 200 ஆண்டு கதை இருந்தது.
எனக்கு இப்படித்தான் பயணம் செய்ய பிடித்திருக்கிறது. ஊர் பார்த்தலென்பது ஊர் மட்டும் பார்த்தல் இல்லை இல்லையா.......

0 Comentarios